T20 உலகக் கோப்பை 2026-இல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங். அபிஷேக் சர்மா தனது முதல் உலகக் கோப்பை தொடரில் கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் மூன்று தொடர்ச்சியான டக்குகளுடன் (பூஜ்ய ரன்கள்) தொடங்கிய அவர், சூப்பர் 8 சுற்றில் அரைசதம் அடித்து திறமையை காட்டினார்.
அதே சமயம், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வேகமான அரைசதம் (21 பந்துகளில் 52 ரன்கள்) அடித்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார். இருப்பினும், ஒட்டுமொத்தமாக 8 போட்டிகளில் 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எனவே, யோக்ராஜ் சிங் இந்தச் செயல்பாட்டில் திருப்தி அடையவில்லை. அபிஷேக் சர்மாவின் ஒழுக்கம் மற்றும் கவனம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
InsideSport-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:“நீங்கள் தோற்றுப்போவது உங்கள் மனம் வேறு எங்கோ இருப்பதால்தான். சுப்மன் கில், அபிஷேக்... தோல்வி வருவதற்கு காரணம் மனம் திசை திரும்புவதுதான். அபிஷேக் விஷயத்தில் அதுதான் நடக்கிறது. அவர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டு சுற்றுகிறார். அது அவரது வேலை இல்லை. அவர் இரவு 9 மணிக்கு படுக்கைக்குச் சென்று, காலை 5 மணிக்கு எழுந்து, ஆயிரம் பந்துகளை அடிக்க வேண்டும்” என்று கடுமையாக அறிவுறுத்தினார்.
மேலும், “யுவ்ராஜ் சிங்கை நெருங்க அவருக்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். முழு பிரபஞ்சமும் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கிரிக்கெட் வீரர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்றைய இளம் வீரர்கள் எங்கே தவறு செய்கிறார்கள்? பார்ட்டிகள், பெண்கள், பணம், எப்போதும் ஷூட்டிங்... இவைதான் பிரச்சனை” என்று கூறினார்.
யோக்ராஜ் சிங் தனது மகன் யுவ்ராஜ் சிங்கின் மென்டராக அபிஷேக் சர்மாவுக்கு உதவி செய்து வரும் நிலையில், இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது. “அபிஷேக் மீது எனக்கு மிகுந்த வருத்தம் உள்ளது. அவருக்கு அடிக்கடி செய்தி அனுப்புவேன் – இந்த விளையாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதே என்று. அவர் எப்போதும் ‘ஆம் சார்’ என்று சொல்வார். ஆனால், ஒற்றை, இரட்டை, பவுண்டரி என்று இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பந்தை ஆகாயத்தில் அடிக்க முடியாது. எப்போதும் சிக்ஸர்கள் அடித்து கூட்டத்தை மகிழ்விக்க முடியாது. அப்படி செய்தால் தோல்வி தான் வரும்” என்று முடித்தார்.இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகும், இளம் வீரர்களின் ஒழுக்கம், சமூக ஊடக பயன்பாடு மற்றும் ஆஃப்-ஃபீல்ட் கவனச்சிதறல்கள் குறித்து யோக்ராஜ் சிங் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள், IPL 2026 மற்றும் எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக அபிஷேக் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
