டெல்லி : 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதற்கான உண்மையான காரணங்களை வக்கீட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் ஜியோஸ்டார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தனது மோசமான ஆட்டமும், அதனைத் தொடர்ந்து அணிக்குத் திரும்பிய இஷான் கிஷனின் அபாரமான பார்மும்தான் தனது உலகக்கோப்பை வாய்ப்பைப் பறித்தது என்று சஞ்சு சாம்சன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சஞ்சு சாம்சன் 24, 6, 6, 10, 0 என அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தச் சமயத்தில் சையது முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் ஜார்கண்ட் அணிக்காகத் தனி ஆளாக நின்று மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடி மிரளவிட்ட இஷான் கிஷன் இந்திய அணிக்குத் திரும்பினார். அவர் வேறு எதவோ ஒரு உச்சகட்ட லெவலில் பேட்டிங் செய்ததாகவும், அவர் தனக்கு மேலே தன்னை விடச் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி அணியில் இடம்பிடிப்பதை அந்தச் சமயத்தில் தான் தெளிவாக உணர்ந்துகொண்டதாகவும் சஞ்சு குறிப்பிட்டார்.
அந்தத் தருணத்தில் அணிக்குத் தேவைப்பட்ட சிறந்த ஃபார்மில் இருந்த ஒரு வீரருக்கு அந்த வாய்ப்பு சென்றடைந்தது என்றும், அப்போது தனது உலகக்கோப்பை கனவு கலைந்துவிட்டதை தான் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
தனது கரியரின் உச்சக்கட்ட பார்மில் இருந்து 7 போட்டிகளில் 3 சதங்களை விளாசி நின்ற நேரத்தில்தான் இந்த எதிர்பாராத பின்னடைவு தற்காலிகமாக ஏற்பட்டது. மக்கள் அனைவரும் தனது இடம் அணியில் நூறு சதவீதம் உறுதியாகிவிட்டதாக நினைத்த போதிலும், தான் மட்டும் எப்போது அப்படி நினைத்ததில்லை என்று சஞ்சு தெளிவுபடுத்தினார். உலகக்கோப்பையை இலக்காக வைத்து தான் மிகவும் கடினமாக உழைத்த போதிலும், நியூசிலாந்து தொடர் தனக்குச் சாதகமாக அமையவில்லை.
இருப்பினும், இந்தத் தோல்வியும் ஏமாற்றமும் தனது வாழ்க்கையில் பல முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளதாக சஞ்சு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "நான் அளவுக்கு அதிகமாகக் கடின உழைப்பில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மணிக்கணக்கில் வலைப்பயிற்சியில் வியர்வை சிந்துவதை விட, மனதளவில் மகிழ்ச்சியாகவும் ரிலாக்ஸாகவும் இருப்பதுதான் மிகவும் முக்கியம் என்று எனது மனைவி அன்று சொன்னது எவ்வளவு உண்மை என்பதை இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது" என்று சஞ்சு சாம்சன் அந்தப் பேட்டியில் நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.
