லக்னோவை லேசா எடுத்துக்க மாட்டோம்..நிச்சியம் பதிலடி இருக்கு! எச்சரிக்கை கொடுத்த கிளாசென்!
லக்னோ அணியின் பந்துவீச்சு தான் எங்களுடைய அதிரடி ஆட்டத்தை தடுத்துவிட்டது என போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத்

ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சற்று தடுமாறி வழக்கத்தை விட குறைவாக ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த ஐபிஎல்-ல் பலம் வாய்ந்ததாக கருதப்படும் SRH அணிக்கு எதிராக இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியையும் லக்னோ பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு லக்னோவை லேசா எடுத்துக்க மாட்டோம் எனவும் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் எனவும் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளாசென் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் பொதுவாகவே எந்த அணிகளையும் லேசாக எடுத்துக்கொள்ளமாட்டோம். எல்லா அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்லவே முடியாது. றிப்பாக இது போன்ற ஆடுகளத்தில் எந்த பந்துவீச்சையும் அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும். அவர்கள் நடு ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார்கள், அதற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் எங்களுடைய விக்கெட்களை எடுத்து அழுத்தம் கொடுத்தார்கள்.
இந்த ஆடுகளத்தில் 210-220 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும் என்றும், ஆரம்பத்தில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்ததால் நினைத்த இலக்கை அடையமுடியவில்லை. ஆனால், நிச்சியம் இந்த தோல்வியை நாங்கள் லேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களுக்கு எதிராக அடுத்ததாக நடைபெறவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்” எனவும் அந்த போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுப்போம் என கிளாசென் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும், லக்னோவுக்கு எதிராக ஹைதராபாத் மீண்டும் வரும் மே 18-ஆம் தேதி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் பி மைதானம் மைதானத்தில் மோதுகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவருடைய பந்துவீச்சில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அபினவ் மனோகர் போன்றோர் விக்கெட் இழந்த காரணத்தால் தான் ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.