ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!
ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் இது வரை பேசாமல் இருந்த பிசிசிஐ முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு அறிவித்தது, பிசிசிஐ (BCCI – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அவர்களை கட்டாயப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
லண்டனில் ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜீவ் ஷுக்லா, “ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் தங்களது ஓய்வு முடிவை தாங்களாகவே எடுத்தார்கள். எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்ல வேண்டும் என்று பிசிசிஐ கட்டாயப்படுத்துவதில்லை. இது எங்கள் கொள்கையாகும். இவர்களின் இடத்தை நிரப்புவது கடினம், ஆனால் இது அவர்களின் சொந்த முடிவு,” என்று திட்டவட்டமாக கூறினார்.
ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று, ரோஹித் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித், 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்கள் (12 சதங்கள், 18 அரைசதங்கள், சராசரி 40.57) எடுத்துள்ளார். 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 31 ரன்கள் மட்டுமே எடுத்து, புரோவில் சோபிக்கவில்லை. இதனால், அவர் ஓய்வு முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
அவரை தொடர்ந்து மே 12, 2025 அன்று, விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 36 வயதான கோலி, 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் (30 சதங்கள், 31 அரைசதங்கள், சராசரி 46.85) எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சதத்துடன் 190 ரன்கள் எடுத்தாலும், பின்னர் அவரது பார்ம் குறைந்தது. அவர் ஏப்ரல் மாதமே பிசிசிஐ-யிடம் ஓய்வு முடிவை தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
சமூக வலைதளங்களில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், மற்றும் பிசிசிஐ ஆகியோர் ரோஹித் மற்றும் கோலியை ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக புரளிகள் பரவின. ஆனால், ராஜீவ் ஷுக்லா இதை மறுத்து, “ரோஹித் மற்றும் கோலி இருவரும் தங்கள் முடிவை தாங்களாகவே எடுத்தனர். பிசிசிஐ எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்வதில்லை. அவர்கள் ஒருநாள் போட்டிகளில் (ODI) தொடர்ந்து விளையாடுவார்கள்,” என்று உறுதிப்படுத்தினார்.