“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!
எடப்பாடி பழனிசாமி சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவது போல பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் என்று கூறி மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, 2002-ல் வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் வரும் பழைய பஸ்ஸை உதாரணமாகக் கூறி, “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட, சுந்தரா டிராவல்ஸ் மாதிரி ஒரு பஸ் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு இபிஎஸ்” என்று கூறினார்.
இந்தப் பேச்சு, பழனிசாமியின் அரசியல் நடவடிக்கைகளையும், அவரது விமர்சனங்களையும் கேலி செய்யும் வகையில் இருந்தது. தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளை “பொய்யும் அவதூறும்” என்று விமர்சித்து, அந்தப் பஸ்ஸிலிருந்து புகை வருவது போல, இவரது வாயிலிருந்து பொய்கள் வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரைக்கும் ஸ்டாலின் கையில் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும். சுயநலத்திற்காக எந்த அந்நிய சக்தியையும் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்குள் விடமாட்டார், தடுத்து நிறுத்துவார் என்று நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை உண்மையாக உழைத்து இந்த நான்காண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஊர் ஊராக சென்று நாங்கள் மக்களிடம் Bedsheet போட்டு வாங்கிய மனுக்களை Excelsheet-களாக்கி, தற்போது Worksheet-களாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மகளிரையே கொச்சைப்படுத்தும் வகையில் பேசிவருகிறார் எடப்பாடி.. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து அவதூறு பரப்புகிறார். ஆனால் அவரை அறியாமலே அந்த திட்டத்தின் விளம்பர தூதராக செயல்படுகிறார்” என்றார்.