என்னது எனக்கு ஓய்வா? சதம் விளாசி அதிர வைத்த ஹிட்மேன்!

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ODI சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரோஹித் சர்மா.

Hero Image

இங்கிலாந்து : அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு சவாலானதாக அமைந்தாலும், மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 110 பந்துகளைச் சந்தித்த ரோஹித், 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 138 ரன்களைக் குவித்து, தான் இன்னும் ஃபார்மில் இருப்பதைக் காட்டினார்.

ஓய்வு வதந்திகளுக்குப் பதில்

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "ரோஹித் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார்" என்று உறுதிபடத் தெரிவித்தார். கேப்டன் ஷுப்மன் கில்லும், "அணியின் உள்ளே இது போன்ற எந்த விவாதமும் நடக்கவில்லை" என்று தெளிவுபடுத்தினார்.

ரோஹித்தின் அதிரடிப் பதில்

தன் மீதான விமர்சனங்கள் குறித்துப் பேசிய ரோஹித் ஷர்மா, "வெளியில் நடக்கும் இரைச்சல்கள் (Outside noise) எனக்குப் புதிதல்ல, அறிமுகமான நாள் முதலே இது இருந்து வருகிறது. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது பணி பேட் பிடித்து நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடுவது மட்டுமே. களத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியம். இந்தச் சலசலப்புகள் இல்லையென்றால் கிரிக்கெட்டில் சுவாரஸ்யமே இருக்காது" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.

தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் அளித்த பேட்டியில், "50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் உச்சம். அந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது கனவு. அதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்," என்று தனது 2027 உலகக்கோப்பை இலக்கை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.