ஐபிஎல்லை மிஞ்சும் அளவிற்கு உலகின் மாபெரும் கிரிக்கெட் லீக் தொடரை நடத்த பிசிசிஐ உடன், சவுதி அரேபியா பேச்சுவார்த்தை என தகவல்.
இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடரை விட, உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் லீக் தொடரை நடத்த சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது, இதில் உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொள்ள வைப்பதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் சவுதி அரேபிய கிரிக்கெட் லீக் தொடரில் கலந்து கொள்வதற்கு, பிசிசிஐ உடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால், இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு டி-20 லீக் தொடர் அதிக சம்பளம் மற்றும் வரவேற்பு அளிப்பதற்கு தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் சவுதி அரேபிய கிரிக்கெட் லீக் தொடரில் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின், அணி உரிமையாளர்களிடமும் இது குறித்து சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கு பிசிசிஐ அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்களும், 2008 ஐபிஎல் தொடருக்கு பிறகு மீண்டும் ஒரே அணியில் விளையாடுவார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை, விரைவில் உறுதி செய்யப்பட்டவுடன், இந்த உறுதியான தகவலை சவுதி அரேபிய அரசு மற்றும் பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node