பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
ரோஹித் சர்மா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக இல்லை என்பது தான் மும்பை அணியை பாதிக்கிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் காவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை அவர் 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அந்த 4 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 0, அதற்கு அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13, பெங்களூருக்கு எதிராக 17 என ஆட்டமிழந்து மோசமான பார்மில் இருக்கிறார்.
இவர் விரிவாகவே ஆட்டமிழப்பதன் காரணமாக மும்பை அணிக்கு பவர்பிளேயில் ரன்கள் கிடைக்கவில்லை இதனால் மும்பை அணி திணறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அப்படி தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் யூடியூப் அளித்த பேட்டியில் ரோஹித் ஷர்மா கொஞ்சம் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரை வழங்கியதோடு அவர் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக இல்லை என்பது தான் மும்பை அணியை பாதிக்கிறது என விமர்சித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” ரோஹித் சர்மா ஒரு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பது நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. ஆனால், பவர்பிளேயில் அவரது அணுகுமுறையும் ஷாட் தேர்வும் சில சமயங்களில் அணியை சிக்கலில் ஆழ்த்துகிறது. முதல் ஆறு ஓவர்களில் அவர் ஆட்டமிழப்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தை பெரிதும் பாதிக்கிறது. அவர் ஆட்டமிழக்காமல் அந்த 6 ஓவர்கள் ஆடிக்கொடுத்தாலே போதும்.
அதனைவிட்டுவிட்டு பவர்பிளேயில் ஆட்டமிழந்தால் அது மும்பைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரோஹித் தனது ஷாட் தேர்வை மிதப்படுத்த வேண்டும். அவர் ஆக்ரோஷமாக ஆடுவதில் தவறில்லை, ஆனால் சில சமயங்களில் பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடுவது அவசியம். முடிந்த அளவுக்கு அவர் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவிக்கவேண்டும். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றியமைத்தால், அது அவருக்கும் அணிக்கும் பெரிய அளவில் பலன் தரும்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.