கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல் வெஹ்தா அணிக்கு எதிராக 4 கோல்களை அடித்து, ஒட்டுமொத்தமாக தனது 500 கிளப் கோல்களையும் கடந்துள்ளார்.
போர்ச்சுகல் சர்வதேச அணியைச்சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் அணிக்காக ஒப்பந்தமாகி அங்கு சவுதி ப்ரோ லீக் தொடரில் விளையாடி வருகிறார். இதில் அல்-நஸ்ர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதிய ஆட்டத்தில், ரொனால்டோ அல்-நஸ்ருக்கு 4 கோல்களை அடித்துள்ளார். அல்-நஸ்ர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் வெஹ்தாவை வென்றது, மேலும் ரொனால்டோ 500 கிளப் கோல்கள் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார்.
ரொனால்டோவிற்கு இது 61-வது ஹாட்ரிக் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி கிளப்களில் விளையாடியுள்ள ரொனால்டோ இதுவரை 503 கிளப் கோல்களை எடுத்துள்ளார். ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களையும், ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களையும், ஜூவென்டஸ் அணிக்காக 81 கோல்களையும், ஸ்போர்ட்டிங் லிஸ்பனுக்கு மூன்று கோல்களையும், இப்போது அல்-நஸ்ருக்கு ஐந்து கோல்களையும் எடுத்துள்ளார்.
இது குறித்து ரொனால்டோ தனது இன்ஸ்டாவில், நான்கு கோல்களை அடித்து தனது 500 கிளப் கோல் மைல்கல்லை அடைந்தது, மற்றும் அணி வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி தரும் உணர்வு என்று கூறியுள்ளார். ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விலகி, கடந்த டிசம்பரில் அல்-நஸ்ர் அணிக்காக இரண்டரை ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.