FIFA World Cup 2026 : கட்டணமே இல்லாம உலகக்கோப்பையை ரசிக்கலாம்! டிடி ஸ்போர்ட்ஸ் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்!

நீங்கள் டிடி ஃப்ரீ டிஷ் (DD Free Dish) வைத்திருந்தால், எவ்விதக் கட்டணமும் இன்றி அந்த முக்கியமான போட்டிகளை உங்கள் தொலைக்காட்சியிலேயே கண்டு மகிழலாம். பிற போட்டிகளைக் காண ஜீ5 சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

Hero Image

உலக கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்து, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 48 அணிகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிஃபா உலகக்கோப்பை 2026 தொடர் தற்பொழுது பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த உலகக்கோப்பை போட்டிகள் எந்த செயலியில் (app) மற்றும் எந்தச் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. மொபைல் மற்றும் டிவியில் போட்டிகளைக் காண்பதற்கான முழு விபரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம்.

இந்தியாவில் 2026 பிஃபா உலகக்கோப்பையை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி வழியே ஒளிபரப்புவதற்கான அதிகாரப்பூர்வ முழு உரிமையையும் 'ஜீ எண்டர்டெய்ன்மென்ட்' (Zee Entertainment) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஒளிபரப்பு செயலி: மொபைல் போன், டேப்லெட் மற்றும் லேப்டாப்களில் உலகக்கோப்பை போட்டிகளை நேரலையாகக் காண 'ஜீ5' (ZEE5) முதன்மைச் செயலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தா விபரங்கள் (Subscription): ஜீ5 செயலியில் போட்டிகளைக் காண கட்டணச் சந்தா அவசியமாகும். இதற்கான 3 மாத சந்தா கட்டணம் ரூ.799 ஆகவும், ஒரு வருடத்திற்கான சந்தா கட்டணம் ரூ.1,699 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவியில் பார்க்க புதிய ஸ்போர்ட்ஸ் சேனல்கள்:

தொலைக்காட்சியில் உலகக்கோப்பை போட்டிகளை நேரலையாக ஒளிபரப்புவதற்காக, ஜீ நிறுவனம் 4 புதிய பிரத்யேக விளையாட்டுச் சேனல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. Unite8 Sports 1
  2. Unite8 Sports 1 HD
  3. Unite8 Sports 2
  4. Unite8 Sports 2 HD

இலவசமாகப் பார்ப்பது எப்படி?

கட்டணச் சந்தா செலுத்த விரும்பாத சாதாரண ரசிகர்களுக்காக, இந்தியாவின் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான 'டிடி ஸ்போர்ட்ஸ்' (DD Sports) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிடி ஃப்ரீ டிஷ் (DD Free Dish): டிடி ஃப்ரீ டிஷ் அமைப்பைப் பயன்படுத்தும் நேயர்கள், இந்த உலகக்கோப்பையின் மிக முக்கியமான முதன்மைப் போட்டிகளை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகக் காண முடியும்.

இலவசமாக ஒளிபரப்பாகும் போட்டிகள்: தொடக்க ஆட்டம், கால் இறுதிப் போட்டிகள் (Quarter-finals), ஜூலை 15 மற்றும் 16-ல் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகள் (Semi-finals), மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டி (Final) ஆகியவை டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் இலவசமாக நேரலை செய்யப்படும்.