கேம் ஓவர்! ஏவுகணையால் தகர்க்கப்பட்ட மாஃபியா சாம்ராஜ்யம்... டிரம்ப் போட்ட அதிரடி பிளான்!

தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட்ட டிரம்ப், "அமெரிக்கப் குடிமக்களைக் குறிவைக்கும் நச்சுப் பயங்கரவாதிகளுக்கு, உலகின் எந்தப் பகுதியிலும் இனி பாதுகாப்பான புகலிடம் கிடையாது" என உலக நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு வரும் வெனிசுலாவின் மிக அபாயகரமான மாஃபியா கும்பலான 'ட்ரென் டி அராகுவா' (Tren de Aragua) அமைப்பின் முதன்மைத் தலைவர் ஹெக்டர் ரஸ்டன்போர்ட் குவெரிரோ புளோரஸ் (Hector Rusthenford Guerrero Flores) என்ற 'நினோ குவெரிரோ' (Nino Guerrero), அமெரிக்க ராணுவத்தின் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அதிரடி வெற்றியை உறுதிசெய்து, தாக்குதலின் விசுவல்களையும் (வீடியோ லிங்க்) வெளியிட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்காவின் 'சதர்ன் கமாண்ட்' (US Southern Command) ராணுவப் பிரிவு இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

வெனிசுலாவின் தென்கிழக்கு மாநிலமான பொலிவரில் (Bolivar) உள்ள ஒரு ரகசியக் கூட்டு உள்கட்டமைப்பைக் குறிவைத்து இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரம்ப் வெளியிட்ட வீடியோவில், பச்சை நிறக் கூரை கொண்ட ஒரு கட்டடம் ஏவுகணை தாக்கி அடியோடு வெடித்துச் சிதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் வெனிசுலாவின் தற்போதைய பாதுகாப்புப் படைகளுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு (Combined Operation) நடத்தப்பட்டுள்ளது. குற்றக் கும்பல்களுடன் நடந்த இந்த ஆயுத மோதலில் நினோ குவெரிரோ கொல்லப்பட்டதை வெனிசுலா தகவல் தொடர்பு அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

42 வயதான நினோ குவெரிரோ, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வெனிசுலாவின் டோகோரான் (Tocoron) சிறைச்சாலையில் கைதியாக இருந்துகொண்டே, அங்கிருந்தபடி ஒட்டுமொத்த 'ட்ரென் டி அராகுவா' குற்றப் பேரரசை இயக்கி வந்துள்ளார்.

7,000 பேர்களைக் கொண்ட சர்வதேசக் கும்பல்: தென்னமெரிக்கா மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கும் சுமார் 7,000 ஆயுதமேந்திய உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சர்வதேசக் கும்பல், மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது.

தேடப்படும் குற்றவாளி: கடந்த 2023-ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இருந்து தப்பிய இந்த நபரைப் பிடிப்பதற்காக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) உள்ளிட்ட அமைப்புகள் 5 மில்லியன் டாலர் (சுமார் 41 கோடி ரூபாய்) பரிசுத்தொகை அறிவித்திருந்தன. மேலும், நியூயார்க் நீதிமன்றம் இந்த நபர் மீது பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருந்தது.

அமெரிக்காவில் நடந்த சில முக்கியக் குற்றச்சம்பவங்களுக்கு இந்த மாஃபியா கும்பலே காரணம் எனக் குறிப்பிட்ட டிரம்ப், "என் தலைமையிலான ஆட்சியில், அமெரிக்கப் குடிமக்களைக் குறிவைக்கும் எந்தவொரு நச்சுப் பயங்கரவாதிகளுக்கும் வெனிசுலாவிலோ அல்லது உலகின் எந்தப் பகுதியிலோ இனி பாதுகாப்பான புகலிடம் கிடையாது" என்று எச்சரித்துள்ளார்.

கேம் ஓவர்! ஏவுகணையால் தகர்க்கப்பட்ட மாஃபியா சாம்ராஜ்யம்... டிரம்ப் போட்ட அதிரடி பிளான்!