டெல்லி : கோடைக் காலத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு ரசிகர்களைக் கவரும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா திட்டத்தின் விலையைக் அதிரடியாகக் குறைத்து புதிய சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி, இதுவரை மாதம் ரூ.149-க்கு வழங்கப்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போது வெறும் ரூ.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓடிடி பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இந்த ரூ.99 திட்டத்தின் கீழ், ஒரே ஒரு சந்தா மூலம் சோனி லிவ், சன் நெக்ஸ்ட், ஆஹா, லயன்ஸ்கேட் ப்ளே, ஹங்காமா, மனோரமா மேக்ஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன்னணி ஓடிடி தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். தினசரி செலவு என்று பார்த்தால் வெறும் ரூ.3.30 மட்டுமே ஆகும் என்பதால், குறைந்த செலவில் தங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும்.
மேலும், இந்தச் சலுகை காலத்தில் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் 'குல்லக்' வெப் சீரிஸின் 5-வது சீசன் மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணப் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் இந்தத் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன.
இது தவிர, இன்னும் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.279 மதிப்பிலான மற்றொரு பிரீமியம் திட்டத்தையும் ஏர்டெல் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் 1 ஜிபி கூடுதல் டேட்டாவுடன், நெட்பிளிக்ஸ் பேசிக் பிளான், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் உள்ளடங்கிய மொத்தம் 23 ஓடிடி தளங்களின் அணுகல் வழங்கப்படுகிறது. இதன் தினசரி செலவு ரூ.9.30 மட்டுமே ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஓடிடி தளத்திற்கும் தனித்தனியாகப் பில் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில், அனைத்துப் பிராந்திய மொழி பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒரே திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள ஏர்டெல்லின் இந்த அதிரடிச் சலுகை, வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
