“நீ ஏன் குறுக்க வர்ற.. தொலச்சிடுவேன் உன்னை”- மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாக மிரட்டிய ராஜேந்திர பாலாஜி.!
அ.தி.மு.க பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

சிவகாசி : விருதுநகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
அப்பொழுது, இந்த விழா மேடையில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிப்பதற்காக வரிசையில் வராமல், முந்திக் கொண்டு வந்ததால் கோபமடைந்த ராஜேந்திர பாலாஜி தாக்கியது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாஃபா பாண்டியராஜன், “அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக பேசியிருந்தார். இந்த நிலையில், விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கட்சி நிர்வாகியை தாக்கியது குறித்து ராஜேந்திர பாலாஜி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, சிவகாசியில் இன்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பல கட்சிகளுக்குச் சென்று வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால்தான் கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்தேன்.
மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. ஈபிஎஸ்க்கு எதிராக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன்.
என்னைப் பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும், சென்னைக்கு போய் பேச கூடாது. அதிமுகவில் குறுநில மன்னன்தான், எனக்கு பின்னால் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் வாள் ஏந்திய படை வீரர்கள். அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எம்ஜிஆர் கையைப் பிடித்து ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நான், ஈபிஎஸ்க்கு மட்டும் கட்டுப்படுவேன்.
எனக்கு கட்சியில் வரலாறு இருக்கிறது. உனக்கு (மா.பா.) என்ன வரலாறு இருக்கிறது? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல, தொலைத்துவிடுவேன். ” என ராஜேந்திர பாலாஜி மிரட்டல் விடுத்தார்.