சென்னை: பெண்ணை தீ வைத்து எரித்த கள்ளக்காதலனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளை தெருவையைச் சேர்ந்தவர் வள்ளி. இவருக்கு சாகுல்ஹமீது என்பவருடன் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சாகுல்ஹமீதுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் வள்ளி. இந்நிலையில் வள்ளிக்கு தர்மபூரி மாவட்டத்தை சேர்ந்த மாதவன் என்வருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் 5 ஆண்டாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் அடிக்கடி வீட்டுக்கு வருவதை மாதவன் வழக்கமாக வைத்துள்ளார். அப்போது, போதையில் மாதவன், வள்ளியின் மகள்களை அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் மகளுக்கு மாதவன் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி மாதவன் குடிபோதையில் வந்து வள்ளியின் மகள்களை தவறான வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் மகள்கள் அழுதுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த வள்ளி, மாதவனை கண்டித்துள்ளார். உடனே, மாதவன் வள்ளியின் மகள்களை வெளியே துரத்திவிட்டு, வீட்டில் ஸ்டவில் இருந்த மண்ணெண்னையை ஊற்றி கொளுத்தியுள்ளார். படுகாயமடைந்த வள்ளி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து, மெரினா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி கலைமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி மாதவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.