பெரம்பலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் தனது மனைவி ,மகள் மற்றும் உறவினர்களுடன் டவேரா வாடகை காரில் கொடைக்கானல் நோக்கி புறப்பட்டனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் அந்த கார் பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பென்னாடம் நோக்கி சென்ற ஹூண்டாய் வெர்னா கார், டிரைவர் சக்தி சரவணனின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பறந்து சென்று எதிரே சென்ற டவேரா காரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் சாலை விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவர் சக்தி சரவணன் குடிபோதையில் நள்ளிரவில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது