அப்பலோ மருத்துவர் சாந்தாராம், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை ஆணையம் அப்பலோ மருத்துவர் சாந்தா ராமுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று காலை சுமார் பத்தரை மணியளவில் மருத்துவர் சாந்தா ராம், சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்பலோ மருத்துவமனையில் நீரிழிவு நோய்ப்பிரிவு சிறப்பு மருத்துவராக உள்ள சாந்தாராம், கர்நாடக சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்த போது அவரது வீட்டுக்குச் சென்று நீரிழிவுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் சாந்தாராம் சிகிச்சை அளித்தார். அந்த வகையில், விசாரணை ஆணையத்தில் ஆஜரான அவரிடம், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை அளித்தபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.