அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சில சமயங்களில் ஜாலியான சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு சமாளிப்பார். அந்த மாதிரியான சர்ச்சைதான் பின்லாந்திலும் நடந்துள்ளது. அந்த நாட்டு அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் கலந்துகொண்டார். இதில், அருகருகே இரு பெண் நிருபர்கள் அமர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். இங்குதான் ட்ரம்ப் குழம்பி உள்ளார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன் வெள்ளை மாளிகையில் நடந்த வேறு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்புக்கு ரஷ்யாவுடனான உறவு குறித்த கேள்வியை பவுலா வெலின் என்ற நிருபர் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துவிட்டு 10 நிமிட இடைவெளியில் இந்தச் சந்திப்புக்கு வந்துள்ளார் ட்ரம்ப்.
அந்த நிருபரும் வேறு ஒரு நிருபருடன் சேர்ந்து இந்தச் சந்திப்புக்கு வந்துள்ளார். இந்தச் சந்திப்பில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ பேசத் தொடங்கியதும். அமெரிக்க – ரஷ்ய உறவு குறித்து மற்றொரு பெண் நிருபரிடமிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ட்ரம்ப் உடனடியாகக் குறுக்கிட்டு, ”மறுபடியுமா” எனக் கேட்க, அதற்கு பின்லாந்து அதிபர், ”இவர் (அந்த நிருபர்) வேறு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது” என விளக்கியுள்ளார்.
வழக்கம்போல ஒரு சிரிப்புடன் சமாளிக்க முயற்சித்தார் ட்ரம்ப். அதற்கு அந்த நிருபர், ”பின்லாந்தில் நிறைய பேர் ஒரே மாதிரியான Blonde (பழுப்பு நிற தலைமுடி) நிறத்தில்தான் இருப்போம். அதனால்தான் உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும்” எனச் சொல்லி ட்ரம்ப்பை வாயடைக்க வைத்தார். ”Go Ahead” எனச் சிரித்துக்கொண்டே சந்திப்பைத் தொடர்ந்தார் ட்ரம்ப்.