தொழிலதிபர் விஜய் மல்லையா தலைவராக இருந்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவன நிதி மோசடி விசாரணையில் உள்ள நிலையில், தற்போது இந்நிறுவனத்தால் கிரிக்கெட் அணிக்காக (ஆர்சிபி) உருவாக்கப்பட்ட நிறுவனமான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட் நிறுவனத்திலும் பெருமளவு நிதி மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிதி நிலை குறித்த அறிக்கை விவரத்தை வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யும் முன்பாக இந்த விவரம் வெளியாகியுள்ளது. ரூ. 115 கோடி அளவுக்கு நிதி நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 115 கோடி நிதி யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிர்வாக ரீதியில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஜூலை 2016-ல் தரப்பட்டது. யுஎஸ்எல் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் இத்தகைய முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது பிரிட்டனின் டியாகோ நிறுவனம் வசம் உள்ளது. இந்நிறுவனத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக அளவிலான பங்குகள் உள்ளன. 2014-ம் ஆண்டு டியாகோ கையகப்படுத்தும் வரை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் விஜய் மல்லையா வசம் இருந்தது.
2010-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2014-ம் ஆண்டு ஜூலை வரையான காலத்தில் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாகத் தெரிகிறது. யுஎஸ்எல் இயக்குநர் குழுவிலிருந்து 2016-ம்ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி விஜய் மல்லையா விலகினார். நிதி விவகாரம் தொடர்பாக டியாகோ நடத்திய விசாரணை 2016 ஜூலை மாதம் நிறைவடைந்தது. இதில் 115 கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனை ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி நிறுவனத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஆர்சிபிஎல் நிறுவனத்தின் செயல்பாடு ஓரளவு குறிப்பிடும்படியாகவே இருந்துள்ளது. 2016-17-ம் நிதி ஆண்டில்இந்நிறுவனம் ரூ.3 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.