தாமிரபரணி ஆற்றில் மெகா தூண்கள் அமைக்கும் பணி துவக்கம்..!

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உள்ள பாலம் அருகே புதிய பாலம் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உள்ள பாலம் அருகே புதிய பாலம் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

தற்போது மெகா தூண்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. .நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை போக்க பல்வேறு புதிய சாலை மற்றும் பாலங்கள் திட்டமிடப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த  சில மாதங்களுக்கு முன்னர் முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  நெல்லை ெகாக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் தற்போது உள்ள சுலோச்சனா முதலியார் பாலம் அருகே மற்றொரு பெரிய பாலம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி இத்திட்டத்திற்கு ரூ.18 கோடி மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாலம் அமைப்பதற்காக ஆய்வு பணிகள் ஏற்கனவே பலகட்டமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து பணிகள் கடந்த மாதம் 6ம்தேதி தொடங்கின.

இந்த புதிய பாலம் தற்போதுள்ள எம்ஜிஆர் சிலை பின்புறம் அருகே கரைப்பகுதியில் தொடங்கி எதிர்பகுதியில் தேவர் சிலை அருகே இணையும் வகையில் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள பாலம் போலவே அகலமாக அமைக்கப்படுகிறது. 237 மீட்டர் நீளமும் 14.8 மீட்டர் அகலமும் இருக்கும். இதில் 10.5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்லவும் மீதமுள்ள அளவில் இருபகுதியும் பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்படுகிறது. பாலத்தை மொத்தம் 10 தூண்கள் தாங்கும்  வகையில் பில்லர்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தூணுக்கும் ஆற்றின் பூமிக்கு கீழ் பகுதியில் பாறை எட்டும் வரை 4 இணைப்பு கான்கிரீட் குழாய் தூண்கள் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது. இது வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திற்கு சற்று அருகே வரை அமையும். இதுபோல் எதிர் முனையிலும் பாலத்தை தொடர்ந்து அமைக்கப்படும். வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகம் அருகே தற்போது உள்ள, ‘பிள்ளையை போட்டு  பலாப்பழம் எடுத்த’ ஓடைப்பாலம் போல் மற்றொரு பாலம் கட்டப்படும்.

அறிவியல் மையம் முன்பகுதியிலும் சர்வீஸ் சாலை வரும் வகையில் அகலப்படுத்தப்படும். இந்த பாலம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி முடிந்ததும் தற்போது உள்ள பாலத்திலும் இந்த பாலத்திலும் ஒருவழிபாதையாக போக்குவரத்து நடைபெற அனுமதிக்கும் வகையில் இருக்கும். இதனால் பாலங்களில் போக்குவரத்து நெரிசல், ஸ்தம்பிப்பு போன்ற பிரச்சினைகள் இருக்காது. கொக்கிரகுளம் புதிய ஆற்றுபாலம் கட்டும் பணி தொடங்கப்படஉள்ளதால் மாநகர வாகனஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பணிகள் வேகமாக நடக்கின்றன. உள்பகுதியில் கனரக  வானகங்கள் செல்வதற்காக இருபுறங்களிலும் ஆற்றை நோக்கி தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக பொருட்கள் ெகாண்டுசெல்லப்பட்டு பணிகள் நடக்கின்றன. பாலத்தை தாங்கும் தூண்களின் பாகங்கள் ரெடிமேடாக செய்யப்பட்டு கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளன. மேலும் பில்லர் அமைக்க இரும்பு கம்பிகளும் குவிக்கப்பட்டுள்ளன, மழைகாலம் தொடங்குவதற்கு முன்னதாக முக்கிய பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்