ராமநாதபுரம் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை, லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில், திமுக நகரச் செயலாளரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில், மரப்பாலம் அருகே மஞ்சலோடை பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, மணல் கொள்ளை தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்றனர். போலீசார் வருவதை கண்ட மணல் திருட்டுக் கும்பல், போலீஸ் வாகனம் மீது லாரியை மோத முயற்சித்து, பின்னர் தப்பியோடியது.
இது தொடர்பான புகாரில், லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், லாரியையும் பறிமுதல் செய்தனர். அந்த லாரி திமுக நகரச் செயலாளர் கார்மேகத்தின் மகன் கார்த்திக் என்பவருக்கு சொந்தமானது என கண்டறிந்த போலீசார், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்த போலீசார், காலையில் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்