கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். கமலின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார்.
ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் இருவரும் சேர்ந்து எடிட் செய்தனர்.
ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல், லஞ்சம் வாங்கும் மகனையே தண்டிப்பதுதான் படத்தின் ஹைலைட். வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவரான அப்பா கமல், அந்தக்கலையை வைத்தே தவறு செய்தவர்களைத் தண்டிப்பார். இந்தப் படம் ரிலீஸாகி, இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இத்தனை வருடங்கள் ஆனாலும், ‘இந்தியன் தாத்தா’ கேரக்டர் இன்றளவும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. கமல் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்களும் 22 வருட நிறைவைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு வேறெந்த படத்திலும் சேர்ந்து பணியாற்றாத கமல் – ஷங்கர் கூட்டணி, ‘இந்தியன் 2’ படத்துக்காக 22 வருடங்கள் கழித்து இணைந்திருப்பது சிறப்பு. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, ‘பிக் பாஸ்’ சீஸன் 2வுக்குப் பிறகு தொடங்க இருக்கிறது. ‘எங்க தப்பு நடந்தாலும் நான் வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது, ஜெய்ஹிந்த்’ என்று ‘இந்தியன்’ படத்தின் கிளைமாக்ஸில் வசனம் பேசியிருப்பார் கமல்ஹாசன். அதில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்கும் எனத் தெரிகிறது.
ரஜினி ரசிகர்கள் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கமல் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது