ராமநாதபுரத்தில், 18 ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம் இன்றி தவித்துவந்த கிராமத்தினருக்கு புதிய விடியல் பிறந்துள்ளது.
சத்திரக்குடி அருகே வீடற்ற 35 ஏழை குடும்பத்தினருக்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது தான் அம்பேத்கர் காலணி. இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்த மாவட்ட நிர்வாகம், அடிப்படை வசதிகள் செய்துதர தவறிவிட்டது. மின்சார வசதி இல்லாதது இவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. பாம்பு, விசப்பூச்சிகள் நடமாட்டத்தால் பல இரவுகளை அச்சத்துடனே கழித்து வந்தனர்.
குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் கல்வி பயில்வதில் மிகுந்த அவதியடைந்தனர். மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் சிரமத்துடன் கல்வி பயிலும்பாடு விவரிக்க முடியாதது.
இந்த கிராமத்தினர் பற்றிய செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளிவந்ததன் விளைவாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்று தெரு விளக்குகள் அமைக்கப்பட்டது. விரைவில் இவர்களது இல்லங்களில் மின்னொளி ஒளிரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது