இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 16-ல் மாணவர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, நேற்று (மே 5) சென்னையில் பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகிய இருவருமே ’தமிழ் தொன்மையானது’ என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். இதன்மூலம், அவ்விரு மொழிகளுக்கும் இடையிலான கருத்துமோதல் முற்றுபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. அதற்குமுன் பிரச்சினையின் சுருக்கத்தை காண்போம்.
சமஸ்கிருதத்தின் முதல் உதாரணமாக ரிக்வேதம் கூறப்படுகிறது. வேதங்கள் துவக்கக் காலத்தில் வாய்மொழியால் பரப்பப்பட்டதே தவிர எழுதப்படவில்லை. எழுத்து வடிவமாக வேதங்கள் உருப்பெற்ற காலம் குறித்த வரலாற்று சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, எழுத்துக்களாக கிடைக்காத வாய்மொழியாக இருந்ததை மட்டும் வைத்து அது பழமையானது எனக் கூற முடியாது. நம் நாட்டில் கிடைத்த முதல் எழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயமாகும் இதை நாணய அச்சுக்கூடத் தலைவரான ஜேம்ஸ் பிரின்ச் எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்து அதற்கு ‘பிராமி’ எனப் பெயரிட்டார்.
வேதகாலத்தில் பிரம்மன் படைப்புகளின் தலைவன் என்பதால் முதன்முதலில் கிடைத்ததை பிராமி எனப்பட்டது. பிராக்கிருத மொழியான இது கி.மு 4-ஆம் நூற்றாண்டில் அசோகர் ஆட்சியில் மக்கள் சொல்மொழியாக இருந்துள்ளது. அசோகரின் ஒரு கல்வெட்டில் சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர், கேரளபுத்திரர் ஆகியோர் தம் அண்டைபகுதியினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைவைத்து, அசோகரின் சமகாலத்தினரான அவர்களின் வழக்குமொழி தமிழாகவும், எழுத்துக்கள் ’தமிழ் பிராமி’யாகவும் கருதப்படுகிறது. சமஸ்கிருதக் கல்வெட்டு இந்தியாவில் முதன் முதலாக கி.பி 1 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. இவைதான் சமஸ்கிருத எழுத்துக்களின் முதல் ஆதாரங்கள் தவிர அதற்கு முன்பாக எதுவும் கிடைக்கவில்லை.
1882 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் ராபர்ட் சீவல் கி.மு 5 ஆம் நூற்றாண்டின் ஒர் கல்வெட்டை கண்டுபிடித்தார். 42 ஆண்டுகளுக்கு பின் மொழி அறிஞர் கே.வி.சுப்பரமணிய ஐயர் அதை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டார். அவர், ’அசோகரின் பிராமியில் உள்ளது போன்ற அடிப்படை எழுத்துக்கள் தமிழ் கல்வெட்டில் இருந்தாலும், வர்க்க எழுத்துக்கள் இல்லை. குறிப்பாக எந்த மொழிகளிலும் இல்லாத தமிழுக்கே உரிய மெய் எழுத்துகளான, ள, ழ, ற, ன ஆகியவை குறியீடுகளாக உள்ளன’ எனத் தெரிவித்தார்.
இதில், சமஸ்கிருத மற்றும் பிராக்கிருத மொழியின் எழுத்துக்கள் சில தமிழில் இருப்பதால் அது ‘தமிழ் பிராமி’ எனப்பட்டது. ஆனால் தமிழ் வரலாற்றாளர்கள் அது அசோகர் பிராமிக்கும் காலத்தால் முந்தைய கல்வெட்டு என்பதால் அதை ‘தமிழி’ என அழைக்கும்படி வற்புறுத்தினர். எனினும், தமிழகத்தின் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் உட்பட வடமாநிலங்களின் பேராசிரியர்களும் இதை வெளிப்படையாக ஏற்பதில்லை. அப்போது முதல் சமஸ்கிருதம், மற்றும் தமிழ் ஆகியவற்றில் பழமையானது எது? என்ற சர்ச்சை துவங்கியது.
ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யா, போலீஷ், லத்தீன், கிரீக் உட்பட பல மொழிகளுடன் சமஸ்கிருதத்திற்கு ஒற்றுமை உள்ளதால் அவை அனைத்தும் ஆரியக் குடும்பத்தை சேர்ந்தவையாக கருதப்படுகிறது. இதை ’இந்தோ-ஐரோப்பா மொழி’ எனவும் கூறுவர். ’சமஸ்கிருதம் தேவர்களால் பேசப்பட்ட மொழி எனவே அது ஒரு தேவமொழி’ எனவும் பேசப்படுகிறது. சமஸ்கிருத அறிஞரும் சுதந்திரப்போராட்ட வீரருமான சி.அரவிந்தர் கூறிய கருத்தை ஏற்கும் பல நடுநிலை மொழி அறிஞர்களும் உள்ளனர்.
புதுச்சேரியின் அரபிந்தோ ஆசிரமத்தின் நிறுவனரான அவர், ’சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டும் தனித்தனி குடும்பங்களை சேர்ந்தவை. ஆனால், இந்த இரண்டிற்கும் பொதுவான ஒரு மொழிக் குடும்பம் இருந்திருக்க வேண்டும். இதன் தாக்கம் தான் இருமொழிகளிலும் ஏற்பட்டுள்ளது.’ எனக் கூறி உள்ளார். எனினும், இந்துத்துவா ஆதரவு மொழி அறிஞர்கள் இதையும் ஏற்றதில்லை. அவர்கள் தொடர்ந்து உலகின் அனைத்து மொழிகளின் தாய் மொழி சமஸ்கிருதம் என மாணவர்களுக்கு போதிக்கும் நிலை நீடிக்கிறது. இதனால், பழம்பெரும் மொழி என்பது சமஸ்கிருதமா? தமிழா? எனும் சர்ச்சை முடிந்தபாடில்லை.
இந்த சர்ச்சையை மீண்டும் தகர்க்கும் வகையில் செம்மொழிப்பட்டியலில் சமஸ்கிருதத்திற்கும் முன்பாக தமிழ் சேர்க்கப்பட்டது. இதன்மூலம், தமிழ் ஒரு பழம்பெரும் மொழி என்பதை முதன்முறையாக மத்திய அரசு ஏற்றது. செம்மொழிப்பட்டியலில் இடம்பெற முக்கியத் தகுதியாக 2500 ஆண்டு பழமை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப தமிழை அதில் சேர்க்க கல்வெட்டு உட்பட பல ஆதாரங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், சமஸ்கிருதத்தை சேர்க்கும் முயற்சி அப்போது எடுக்கப்படவில்லை. தமிழ் சேர்க்கப்பட்டு 2004-ல் அரசு உத்தரவு வெளியிடப்படும் போது செம்மொழிக்கான தகுதி 1500 ஆண்டு பழமையானதாக குறைக்கப்பட்டிருந்தது