மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு தண்டனையா? - கனிமொழி கேள்வி!

உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் எம்.பி.க்கள் பேசகூட வாய்ப்பு கிடைக்காது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

Hero Image

டெல்லி : தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக எம்.பி. கனிமொழி ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

மக்களவையில் பேசிய கனிமொழி,“எம்.பி.க்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 ஆக உயர்த்தினால், தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்குக் கூட இல்லாமல் 3ல் 2 பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பைத் திருத்த முடியும். தெற்கின் அனுமதி இல்லாமல் நாட்டின் அரசியல் அடிப்படையையே மாற்ற முடியும்” என்று எச்சரித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:“தொகுதி மறுவரையறை மசோதாவில் கூறப்படுவதும், அமித் ஷா கூறுவதும் ஒன்றாக இல்லை. கடைசியாக வெளிவந்த சென்சஸ் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவின் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா? தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மகளிர் இட ஒதுக்கீடு என்ற முகமூடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்கள் 15 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை வைத்து தொகுதி மறுவரையறை கொண்டு வர முயற்சி.உறுப்பினர்களின் எண்ணிக்கை 850ஆக உயர்த்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு 11 இடங்களை இழக்கும், ஆனால் 50 இடங்கள் கிடைக்கும் என்கிறார் அமித் ஷா.எந்த ஆண்டு மக்கள்தொகையை வைத்து தொகுதி மறுவரையறை என்பதை ஆளுங்கட்சியே முடிவு செய்யும் என்கிறது மசோதா.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்தியாவின் வரைப்படத்தை மாற்ற முயற்சி.”கனிமொழியின் இந்தப் பேச்சு மக்களவையில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது.

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வலுத்துள்ளது.தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து, “இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.