ராமேஸ்வரம்: மீன்பிடி தடைகாலத்தால் கடந்த 24 நாட்களாக தமிழகம் முழுவதும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வரத்து குறைந்து ரூ.250 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஏப். 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள், தமிழகம் முழுவதும் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடையில்லாததால், அவர்கள் மட்டும் தொடர்ந்து மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்வரத்து குறைந்து, அன்றாட தேவைக்கு கூட மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
வரத்து குறைவால் மீன்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.50க்கு விற்ற மீன்கள் தற்போது ரூ.200 வரை விலை போகிறது. சீலா, இறால், நண்டு போன்றவைகள் வழக்கமான விலையை விட 2 மடங்கு விலையில் விற்கப்படுகிறது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கடந்த 24 நாட்களாக கரையில் நிறுத்தப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ₹6 கோடி வீதம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் ரூ.250 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. படகுகள் கடலுக்கு செல்லாததால் படகில் செல்லும் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை, வருவாய் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். பலர் வேறு மாநிலங்களுக்கு தொழில் தேடி சென்று விட்டனர். மீன்பிடி தடைகாலத்தில் அரசால் வழங்கப்படும் நிவாரண நிதியும் இதுவரை வழங்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினரும் அன்றாட சாப்பாடு, செலவுகளுக்கு கூட கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன