ரூ.76 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைக்கான பணிகள் தொடங்கியது..!

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி  பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற  நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச்  2013ம்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி  பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற  நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச்  2013ம் ஆண்டு ரூ.76 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைக்கான பணிகள் தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகள் உள்ள நாகர்கோவில்  நகராட்சியில் 18 வார்டுகள் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும்  பாதாளசாக்கடை பணிகள் தொடங்கியது. மொத்தம் 118 கிலோ மீட்டர் தொலையில்  அமைக்க தொடங்கிய இந்த பணி. தற்போதுவரை 96.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு  முடிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பணிகள் தற்போது நடந்து வருகிறது.  இதில்  சுமார் 20 கிலோ மீட்டர் அளவிற்கு பணிகள் சிக்கலான பகுதியாக உள்ளது. குறிப்பாக குறுகலான தெருக்கள், தெருக்களில் கழிவுநீரோடைகள் செல்லும் பகுதி  எனவுள்ளது. இதன் காரணமாக அந்த பணிகள் செய்வதில் சிக்கல் இருந்து வருகிறது. பணி தொடங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி முடியவில்லை என பொதுமக்கள்  குற்றம்சாட்டி வருகின்றனர். நீதிமன்ற வழக்கு மற்றும் நெடுஞ்சாலைதுறை  அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டு  வருகிறது. பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் பணி  முடிக்கப்பட்டு இருந்தால் ரூ.52 கோடியை மத்திய அரசு வழங்கி இருக்கும்.

ஆனால் காலம் கடந்ததால் மத்திய அரசு வழங்கவேண்டிய ரூ.52 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து  வருகிறது. நாகர்கோவில் நகராட்சி பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பரக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டு  வரும் கழிவுநீர்நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளைஉரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்  சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்து கழிவுகளை தனியாக பிரித்து உரமாகவும், நீரை  விவசாய பயன்பாட்டுக்கும் திருப்பி விடப்படும். மக்கள்  தொகையை கணக்கில் கொண்டு தினமும் சுத்திகரிப்பு நிலையத்தில் 175 லட்சம்  லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2  பிரமாண்டமான பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிளாண்டுகளில்  கான்கிரீட் போடும் பணி நடக்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் ரூ.17  கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

இதுபோல் பரக்கின்கால் பகுதியில் அமைந்து  வருகின்றன கழிவுநீரேற்று நிலையம் ரூ.6 கோடியில் நடக்கிறது. பாதாளசாக்கடை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த பிளாண்டுகளும் அமைக்கப்படுகிறது. கழிவுநீர் நீரேற்று நிலைத்தில் மொத்தம் 3 பிளாண்டுகள் அமைக்கப்படுகிறது.  நகர பகுதியில் பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் இந்த பிளாண்டுகளில்  வந்து, பின்னர் அங்கு தேவையில்லாத பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை அகற்றியபின் வலம்புரிவிளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். கழிவுநீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பாதையில் பெரிய குழாய் பதிக்கும் பணி  இன்னும் 2 வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இது குறிதது குடிநீர் வடிகால்  வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: 96.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள்  பதிக்கப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. தற்போது பரக்கின்கால் மடத்தில்  கழிவுநீரேற்று நிலையம், வலம்புரிவிளையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.   பாதாளசாக்கடை திட்டப்பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிவடையும் என்றார்.நாகர்கோவில் நகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற  வகையில் கழிவுகளை வெளியேற்ற கண்டிப்பாக பாதாளசாக்கடை தேவையான ஒன்று.  பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின் கொசுதொல்லை மாறும். மேலும் சாலையில் கழிவுகள் ஓடுவதும், கழிவு நீரால் தெருக்களில் சுகாதார கேடு ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே இந்த பணியை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்