புதுச்சேரியில் மருந்து நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியில் ஸ்ட்ரைடு ஷாஸன் (Stride Shasun) என்ற மருந்துகளுக்கான வேதிப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது 4 ஆயிரத்து 500 லிட்டர் அளவுக்கு வேதிப் பொருள் தயாரிக்கப்படும் இந்த நிறுவனத்தை, 9 ஆயிரத்தும் 150 லிட்டர் வேதிப் பொருள் தயாரிக்கும் அளவுக்கு விரிவு படுத்த புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் எனக் கூறி பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், நிறுவனத்தை ஒட்டியுள்ள பகுதி மக்களிடம் விரிவாக்கம் செய்வது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஒரு தரப்பினர் நிறுவன விரிவாக்கத்திற்கு ஆதராவக கருத்துத் தெரவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினர் கருத்துக் கேட்பு நடைபெற்ற திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்டவர்கள் வாயிலில் நின்றபடி நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போலீசார் அவர்களைக் கலைந்து போகச் சொன்ன பின்னரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து, போலீசார் கூட்டத்தைக் கலைப்பதற்காக தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். இதனால் போராட்டக்காரர்கள் அங்கும், இங்குமாக சிதறி ஓடினர். அந்தப் பகுதியே சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
கண்ணீர்ப்புகைக் குண்டு வீசப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்திய கூட்டம் கலைந்து சென்றது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்