உலகின் மிகப்பெரிய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு! விலை எவ்வளவு தெரியுமா?

உலகின் மிகப்பெரிய மற்றும் முழுமையான 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு, வரும் ஜூலை 14-ஆம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படவுள்ளது.

Hero Image

சென்னை : தொல்பொருள் ஆராய்ச்சியிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக, உலகின் மிகப்பெரிய மற்றும் முழுமையான ‘டி-ரெக்ஸ்' (T. Rex) டைனோசர் எலும்புக்கூடு விரைவில் ஏலம் விடப்படவுள்ளது. நியூயார்க்கில் வரும் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த பிரம்மாண்ட ஏலத்தில், இந்த எலும்புக்கூடு சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 38 அடி நீளமும், 12.5 அடி உயரமும் கொண்ட இந்த டி-ரெக்ஸ் எலும்புக்கூடு, அதன் பிரம்மாண்டத்திற்குப் பெயர் பெற்றது. இந்த டைனோசர் எலும்புக்கூடு, அமெரிக்காவின் சவுத் டகோட்டா பகுதியில் உள்ள கேரி கஸ் லிக்கிங் (Gary Gus Licking) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 2021-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக நீடித்த கடினமான அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, இது முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த எலும்புக்கூட்டைத் தனது நிலத்தில் கண்டெடுத்த உரிமையாளர் கேரி கஸ் லிக்கிங், தற்போது உயிரோடு இல்லை. அவரது குடும்பத்தினர் இந்த ஏலத்தை முன்னெடுத்துள்ளனர். ஏலத்தில் கிடைக்கும் பிரம்மாண்டத் தொகையான ரூ. 250 கோடி, மறைந்த கேரி கஸ் லிக்கிங்கின் குடும்பத்தினருக்கே சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அருங்காட்சியக ஆர்வலர்கள் மத்தியில் இந்த ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு டைனோசர் எலும்புக்கூடு தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டறியப்பட்டு, இப்போது உலகப் புகழ்பெற்ற ஏலத்திற்கு வந்திருப்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு! விலை எவ்வளவு தெரியுமா?