மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி என்பதால் அங்கு வீசிய இதமான காற்றால் மக்கள் மனம் மகிழ்ச்சியில் பொங்கியது.நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பண்பொழி, கரிசல் குடியிருப்பு, திருமலை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. .
திருச்சியில் வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் மாலை கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டியது. பாலக்கரை, மேலப்புதூர்சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருச்சி மேலப்புதூர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் கனமழை காரணமாக 7 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. அவ்வழியே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து நடுவழியில் நின்றுபோனதால் பயணிகள் பேருந்திலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினர். எச்சரிக்கையையும் மீறி பேருந்து இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து அந்த வழியே போக்குவரத்தை போலீஸார் தடை செய்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், கஞ்சங்கொள்ளை, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.