வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது.!
நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னை : வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம்வங்கதேச கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
அதன்படி, மோங்லாவிற்கு தெற்கில் 130 கிமீ, சாகர் தீவுக்கு 150 கிமீ, கொல்கத்தாவுக்கு 170 கிமீ தூரத்தில் மையம்கொண்டிருக்கிறது. இது மெதுவாக, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் வாக்கில் மேற்குவங்க வங்கதேச கடல் பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா, ஜார்கண்ட் வழியே நகர கூடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.