ADMK Ex-MLA : தேர்தலில் பொய்யான தகவல்.? முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை.!

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது தி.நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகபி பொறுப்பில் இருந்தவர் தி.நகர் சத்யா எனப்படும் சத்ய நாராயணன். இவர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.
சட்டமன்ற தேர்தலின் போது தனது சொத்து கணக்காக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி.நகர் சத்யாவின் சொத்து மதிப்பை வெளியிட கேட்டுள்ளார். அப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பானது 13 கோடியான தகவல் வெளியானதாக தெரிகிறது.
இதனை அடுத்து சட்டத்திற்கு புறம்பாக தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா தெரிவித்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்து இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அடுத்து இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தி.நகர் சத்யாவுக்கு சொந்தமான இல்லம், அவருக்கு சொந்தமான மற்ற இடங்கள் என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.