பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர், 4 சிறார்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது அந்நாட்டு மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், இது பயங்கரவாத குழுக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு கோபத்தை மூட்டியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்தது முதலே இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் இருந்த சமயத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. அவை தொடர்ந்து இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தான் நேற்று ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது.
இத்தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இன்னும் முன்னேறி காஷ்மீர் பகுதியில் இந்திய எல்லைக்குள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தொடர்ந்து முன்னேற முயற்சித்து வருகிறது. மேலும், நேற்று கர்னா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேர் சிறார்கள் என்றும், ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார் என்றும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 31 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அண்மையில் உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.