போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?
டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில் போர் நடந்து ஐபிஎல் போட்டி நின்றவுடனே அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸுடனான மீதமுள்ள 2025 ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் பதட்டமான சூழ்நிலை காரணமாக, ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளுக்கு இந்தியா திரும்புவதை ஸ்டார்க் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராவதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இப்போது கவனம் செலுத்துவார்.
அதே சமயம் டெல்லி அணிக்கு பந்துவீச்சை பொறுத்தவரையில் அவர் தான் ஒரு தூணாக இருந்திருந்தார். இன்னும் டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை. 13 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் டெல்லி அணி 3 போட்டிகள் விளையாடவிருக்கும் நிலையில், அந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலையில், ஸ்டார்க் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
ஸ்டார்க் இல்லை என்றால் அவருக்கு பதில் யார்?
ஸ்டார்க் இல்லையென்றால் நடராஜன் தான் அவருக்கு பதிலாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஸ்டார்க்கைப் போலவே இடது கை பவுலராக இருப்பதால் சிறந்த மாற்றாக இருக்க முடியும். இவர் டெத் ஓவர்களில் (death overs) சிறப்பாக பந்து வீசுபவர் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசுவதில் பெயர் பெற்றவர். எனவே, நடராஜன் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், இதற்கிடையில், சக ஆஸ்திரேலிய வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தங்கள் லீக் போட்டிகளுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் மீண்டும் இணைய உள்ளனர். ஸ்டார்க் மட்டும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டமான சூழ்நிலை காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.