மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!
தற்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக 4, அதிமுக 2 இடங்களுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) மாநிலங்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து அதிமுகவின் முடிவிற்காக பொறுமையாக காத்திருக்கிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பொறுமை கடலினும் பெரிது” என்று கூறி, இது தொடர்பாக அவசர முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணி மற்றும் சீட் பகிர்வு குறித்து தெளிவான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து அதிமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், தேமுதிகவின் பலம் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கூட்டணியில் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் விரும்புகின்றனர். எனவே, தமிழக அரசியல் களத்தில் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வுகளும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் “பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” என்று மாநிலங்களவை பதவி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.