உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘வெற்றி நிச்சயம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடைபெற்றது. தமிழ்நாட்டை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ளதாகவும், இந்தத் திட்டம் மாணவர்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயார்படுத்தும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் கல்வியை உறுதியாகப் பற்றி, தங்கள் எதிர்காலத்தை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அது மட்டுமின்றி, ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான பயிற்சிகளும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். இந்தத் திட்டம், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை வேலைவாய்ப்புக்குத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் திறனைப் பெறுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர் மாணவர்களின் வெற்றி, ஒரு தந்தை தன் பிள்ளையின் வெற்றியைப் பார்த்து மகிழ்வது போன்ற மகிழ்ச்சியைத் தனக்கு அளிப்பதாக அவர் உணர்ச்சி பொங்க கூறினார். மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைய இந்தத் திட்டம் ஒரு பாலமாக இருக்கும் எனவும், “கல்வியை இறுகப் பற்றுங்கள், உங்களுக்காக நான் எப்போதும் இருக்கிறேன்,” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியது திராவிட மாடல் அரசும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். உங்களுடைய வெற்றிதான் நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி. வெற்றி பெறவேண்டும் என்று தான் அனைவரும் உழைக்கின்றோம். அந்த Success-ஐ உருவாக்கும் ஒரு Successfulஆன திட்டத்திற்கான Success Meet தான் இந்த வெற்றிவிழாஅதுமட்டுமின்றி வெற்றி நிச்சயம் என்ற புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம். உங்களுக்கான வாய்ப்புகளை எளிதாக்க வேண்டும். வெற்றி படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்பதற்காகதான் நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.