2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!
இந்த போட்டியில், 3 விக்கெட்டுகளுக்கு இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியுள்ளது.

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்தியாவுக்கு ஒன்பதாவது ஓவரில் முதல் அடி விழுந்தது. போட்டியில் முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 26 பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கிறிஸ் வோக்ஸ் அவரை கிளீன் பவுல்டு செய்தார். கருண் நாயர் 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சதத்தை தவறவிட்டார். முதல் டெஸ்டை போல இரண்டாவது டெஸ்டிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 107 பந்துகளில் 87 ரன்களை அடித்து அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஜெய்ஸ்வால் கொடுத்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால் 16 முறை 50+ ஸ்கோர்களை அடித்து அசத்தியுள்ளார். இப்போது, இந்திய அணி 59 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, ஷுப்மான் கில் 56 ரன்கள் எடுத்தும், ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்தும் களத்தில் விளையாடி வருகின்றனர்.