அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!
பாமகவில் நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று ஜூலை 2, 2025 அன்று திட்டவட்டமாக தெரிவித்தார். “கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முழு அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகத் தொடர்ந்து பணியாற்றுவார்,” என்று ராமதாஸ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அன்புமணி, அருளை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, ஜூலை 2, 2025 அன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அருள், “35 ஆண்டுகளாக ராமதாஸுடன் பயணித்து வருகிறேன். என்னை இணை பொதுச் செயலாளராக நியமித்தவர் ராமதாஸ். அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அருள் மேலும், ராமதாஸே கட்சியின் முழு அதிகாரம் படைத்த தலைவர் என்றும், அன்புமணி வெறும் செயல் தலைவர் மட்டுமே என்றும் வலியுறுத்தினார்.
இந்த மோதல், பாமகவை இரு அணிகளாகப் பிளவுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. ராமதாஸ் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த, வரும் ஜூலை 10 அன்று கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஒரு பக்கம் அன்புமணி கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வரும் நிலையில், மற்றோரு பக்கம் ராமதாஸ் தனக்கு தான் கட்சியில் முழு அதிகாரம் என தெரிவித்து வருவது பாமக தொண்டர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.