ஏமனில் மரண தண்டனை…நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!
நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் ஏமன் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வருவதாக நம்பிக்கை எழுந்துள்ளது.
ஏனென்றால் இன்று ஏ.பி.அபூபக்கர், யேமனின் புகழ்பெற்ற சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹஃபீஸ் மூலம், தலாலின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி பெற்றார். வெளியான செய்தி விவரங்களின் அடிப்படையில், ஜூலை 15 (இன்று) அன்று தலாலின் குடும்பத்தினருடன் ஒரு முக்கிய சந்திப்பு ஏமன் தமார் நகரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில், ஹபீப் உமரின் பிரதிநிதி ஹபீப் அப்துர்ரஹ்மான் அலி மஷ்ஹூர், ஏமன் அரசு அதிகாரிகள், ஜினாயத் நீதிமன்ற நீதிபதி, உள்ளூர் பழங்குடி தலைவர்கள், மற்றும் தலாலின் சகோதரர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏ.பி.அபூபக்கர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு தலாலின் குடும்பத்திடம் ஏ.பி.அபூபக்கர் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். இதற்காக, ‘நிமிஷா பிரியாவை காப்பாற்று சர்வதேச செயல் கவுன்சில்’ மற்றும் அப்துல் ரஹீம் அறக்கட்டளை ஆகியவை 11 கோடி ரூபாய் (1 மில்லியன் டாலர்) இழப்பீடாக வழங்க தயாராக உள்ளன.
ஏ.பி.அபூபக்கர், ஏமன் அரசை மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரியுள்ளார், இந்த கோரிக்கையை ஏமன் அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிமிஷாவின் தாயார் பிரேமகுமாரி, கடந்த ஆண்டு முதல் யேமனில் முகாமிட்டு, பேச்சுவார்த்தைகளுக்கு உதவி வருகிறார்.
இந்திய அரசு, ஏமனில் ஹவுதி நிர்வாகத்துடன் முறையான தூதரக தொடர்பு இல்லாததால், வரையறுக்கப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, உடனடி தலையீட்டை வலியுறுத்தியுள்ளார். “நிமிஷாவின் வழக்கு பரிதாபத்திற்குரியது, அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறோம்,” என்று விஜயன் கூறினார். இந்த பேச்சுவார்த்தைகள் நிமிஷாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கு கடைசி நம்பிக்கையாக அமைந்துள்ளன.
தலாலின் குடும்பம் இழப்பீட்டு பணத்தை ஏற்க முன்வந்தால், நிமிஷாவுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கு இந்தியாவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கந்தபுரத்தின் தலையீடு மற்றும் ஏமனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நிமிஷாவின் விடுதலைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.