எங்கள் உள்ளம் கலங்குகிறது…சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்!

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு என சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் இறப்பு குறித்து பா.ரஞ்சித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MohanRaj

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் (ராஜ்கமல், வினோத், பிரபாகரன்) மீது கீழையூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் இறப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில் உருக்கமாக கூறியதாவது ” ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.
செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம” எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்