நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?
ஜூலை 16, 2025 அன்று நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இருப்பினும், ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். எனவே, நிமிஷா பிரியா இந்த தண்டனையில் இருந்து காப்பாற்ற அவருடைய குடும்பமும், இந்திய அரசாங்கமும் முயற்சி செய்து வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனின் சனாவில் தங்கி, மஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார்.
ஆனாலும், மஹ்தியின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் நம்பிக்கை விடாமல் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வருவதாக நம்பிக்கை எழுந்துள்ளது.
ஏ.பி.அபூபக்கர், ஏமன் அரசை மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரியுள்ளார், இந்த கோரிக்கையை ஏமன் அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் ஏற்கனவே, வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து மலையாள ஊடகங்களின் ஆதாரங்களின் படி வெளியான செய்தி என்னவென்றால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் இன்னும் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.