நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

இந்தியாவின் கிராண்ட் முஃப்தியுமான கந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முயற்சியால் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ஏமன் அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

nimisha priya case Sheikh Abubakr Ahmad

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 2020-ல் யேமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். எனவே, நிமிஷா பிரியா இந்த தண்டனையில் இருந்து காப்பாற்ற அவருடைய குடும்பமும், இந்திய அரசாங்கமும் முயற்சி செய்து வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனின் சனாவில் தங்கி, மஹ்தியின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு பெற முயற்சித்து வருகிறார்.

ஆனாலும், மஹ்தியின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் நம்பிக்கை விடாமல் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏமனில் முன்னேறி வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவின் பத்தாவது மற்றும் தற்போதைய கிராண்ட் முஃப்தி  ஷேக் அபூபக்ர், ஏமனில் உள்ள முக்கிய இஸ்லாமிய அறிஞர்களைத் தொடர்பு கொண்டார். அவர்களுக்கு இந்த வழக்கைப் பற்றி தெளிவாக விளக்கினார். “இஸ்லாம் மனிதநேயத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். ஏமனில் உள்ள அறிஞர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு, ஒன்று கூடி இதைப் பற்றி பேசினார்கள். பிறகு, “நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்” என்று சொன்னார்கள். இதன் விளைவாக, நிமிஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள்.

இதை உறுதிப்படுத்த ஒரு ஆவணத்தையும் அவர்கள் ஷேக் அபூபக்ருக்கு அனுப்பினார்கள். இந்த நிறுத்தம், இனி இந்த வழக்கில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்த உதவும்.ஷேக் அபூபக்ர் இதை இந்திய அரசுக்கு தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். இதனால், இந்திய அரசும் இந்த வழக்கில் உதவ முடியும் என்று அவர் நம்புகிறார். அவர் மேலும் சொன்னார்: “நாங்கள் இதில் மதமோ, ஜாதியோ பார்க்கவில்லை. இது ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி. எல்லோரும் இதைப் புரிந்துகொள்வார்கள்.”எனவும் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது என்பது, நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஷேக் அபூபக்ரின் முயற்சியால் இந்த மாற்றம் வந்தது. இனி இந்தியாவும், யேமனும் பேசி, இந்த வழக்கைத் தீர்க்க முயற்சிக்கலாம்.என்ன நடக்க போகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்