நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!
நிமிஷா பிரியா மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக மதத்தலைவர் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தெரிவித்துள்ளார்.

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை, சனாவில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் கோரிக்கையை ஏற்று, ஷேக் உமர் ஹபீள் தங்களால் நியமிக்கப்பட்ட ஏமன் அறிஞர்கள் குழு, வடக்கு ஏமன் ஆளுநர்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திர அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காந்தபுரம் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார், ஜூலை 28, 2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், “நிமிஷா பிரியாவின் மரண தண்டனை, இதற்கு முன்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று கூறினார். அவரது கோரிக்கையின் பேரில், ஷேக் உமர் ஹபீள் தங்களால் நியமிக்கப்பட்ட யெமன் அறிஞர்கள் குழு, வடக்கு யெமன் ஆளுநர்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திர அதிகாரிகளுடன் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் குற்றவாளியை மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். முஃப்தி மேலும் கூறுகையில், “இந்திய குடிமகன் ஒருவர் வெளிநாட்டில் மரண தண்டனை எதிர்கொள்ளும்போது, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது தேசிய பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் நான் தலையிட முடிவு செய்தேன். இஸ்லாம் மனிதாபிமானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் மதம். யெமனில் உள்ள அறிஞர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கோரினேன்,” என்றார்.
மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட பிறகு, உயிரிழந்த நபரான தலால் அப்தோ மஹதியின் குடும்பத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, பிணைத் தொகை (பணஇழப்பீடு) உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் முடிவு செய்யப்படும் என்று காந்தபுரம் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூலை 16, 2025 அன்று நிமிஷாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட மரண தண்டனை, காந்தபுரத்தின் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய மத்திய அரசு இராஜதந்திர பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று காந்தபுரம் கோரியிருந்தார்.
ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை மறுத்திருந்தது.நிமிஷா பிரியா, 2017-ல் தனது கணவர் தலால் அப்தோ மஹதியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2019-ல் யெமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இந்த வழக்கில், தலாலின் குடும்பத்தினர் “பிணைத் தொகை” (பண இழப்பீடு) ஏற்க மறுத்ததால், மரண தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, காந்தபுரத்தின் முயற்சியால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் விடுதலைக்கு மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.