சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனக் கண்டித்துத் தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிரணி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சாவூர் காவல்துறையினர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்த பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார்.

"பொய் வழக்குகளைப் பதிவு செய்து சென்னையிலிருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள். நாங்கள் காவல்துறையைப் பார்த்துப் பயந்து ஓடிப் போய்விடவில்லை. ஆனால், இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் உயிரிழந்தபோதும் அவர்களின் குடும்பத்தினரையோ அல்லது ஊடகங்களையோ சந்திக்காமல், தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை இந்த நாடே அறியும்" என்று அவர் சாடினார்.

மேலும் தனது கண்டனத்தைத் தொடர்ந்து பதிவு செய்த அவர், "விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன். விவசாயிகளின் நலனுக்காக 300 கி.மீட்டர் அல்ல, 3,000 கி.மீட்டருக்கு அப்பால் அழைத்துச் சென்றாலும் நான் செல்லத் தயார். உங்களது இந்த அடக்குமுறைகள் எங்களது மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்க முடியாது.

கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும், அடுத்த ஒரு மாதத்திற்குள் தனது பட விளம்பரத்திற்காக மலேசியா சென்று குத்தாட்டம் போட்டவர்தான் இந்த முதலமைச்சர். வேண்டுமானால் அவர் கைதுக்குப் பயப்படலாம், ஆனால் நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்" என்று உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகத் தெரிவித்தார்.