சென்னை : காரம்பாக்கத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் ஏற்பட்ட சில சறுக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் மனநிலை குறித்து அவர் மிகவும் ஆவேசமாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்தபோது கலைஞர் எடுத்துக்கொண்ட உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். "தோற்றுவிட்டோம் என்று சொன்னபோது, மிகுந்த உற்சாகத்தோடு கலைஞர் அதை எடுத்துச் சொன்னார். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இப்போதுதான் இன்று முதல் நாங்கள் வாய்கால் வெட்டிக்கொண்டிருக்கிறோம். வாய்கால் வெட்டிவிட்டால் தண்ணீர் தானாக வரும். ஆக, ஐந்தாண்டு காலம் கழித்து தண்ணீர் வரும்போது, நாங்கள் வெட்டி வைத்துள்ள இந்தப் பாதையில்தான் அது வரும்" என்று கலைஞர் அன்று கூறியதை நினைவு கூர்ந்தார். அதே பாதையில்தான் தற்போதைய திமுகவினரும் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களின் சில விமர்சனங்களுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "இங்கு சிலர் வீட்டு வரி உயர்வு குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் பேசுகிறார்கள். நீங்கள் தேர்தலில் நின்றுவிட்டு இப்போது ஏன் கவலைப்படுகிறீர்கள்? மிகவும் அக்கறையாகப் பேசுகிறீர்கள், இனிமேலாவது வாயை மூடிக்கொள்ளுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது" என ஆவேசமாகக் கூறினார். மேலும், பொதுமக்களின் ஆதரவு மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில், தங்களுக்கு வாக்களித்தவர்களைத் தாண்டி விமர்சனம் செய்பவர்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மிகவும் ஆதங்கத்துடன் பேசிய ஆர்.எஸ்.பாரதி, சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் அவர்களின் தோல்வி குறித்தும், அங்குள்ள வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

சைதாப்பேட்டைக்கு மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டுவந்தவர் மா.சுப்ரமணியன் என்றும், அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உறவினர்கள் அனைவரும் சரியாக வாக்களித்திருந்தாலே அவர் எளிதில் வெற்றி பெற்றிருப்பார் என்றும் கூறினார்.

ஆனால், சைதாப்பேட்டையில் மா.சுப்ரமணியனைத் தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ரீதியில் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்காகப் போராடி பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தாலும், பொதுமக்களிடமிருந்து சரியான ஆதரவு கிடைக்காததைச் சுட்டிக்காட்டிய அவர், "இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். மக்களுக்காக உழைப்பதை நிறுத்திவிட்டு, இனி கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஓய்வெடுப்போம்" என்று மிகவும் காட்டமாகப் பேசினார்.