RX100 வாங்க முடியுமா? ஜி.வி. பிரகாஷ் பைக் கிப்ட் பின்னணியில் இருக்கும் ரகசியம்!

‘இம்மார்டல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷுக்கு தயாரிப்பாளர் ஒரிஜினல் Yamaha RX100 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பைக் பிரியர்களுக்கும் இடையில் இப்போதைய ஹாட் டாபிக் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்தின் வெற்றி விழாதான். படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஒரு செம சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதுதான் ஒரிஜினல் ரெட்ரோ ஸ்டைல் யமஹா RX100 பைக். இந்த செய்தி சோசியல் மீடியாவில் தீயாய் பரவ, "இப்போ எப்படி புதுசா RX100 பைக் கிடைக்குது? நாமும் எப்படி வாங்குவது?" என்ற கேள்விகள் இணையம் முழுக்க ட்ரெண்டாகி வருகின்றன.

என்றும் குறையாத யமஹா RX100 கிரேஸ்

80 மற்றும் 90-களில் இந்திய சாலைகளை ஆட்டிப்படைத்த ஒரு பைக் தான் யமஹா RX100. அந்த காலத்து இளைஞர்களின் கனவு வாகனமாக இருந்த இந்த பைக்குக்கு, 2026-லும் மிரட்டலான ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதன் தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம் (Sound), மின்னல் வேக பிக்கப், மற்றும் ரெட்ரோ லுக் என இன்று வரை இதற்கு இணையான ஒரு பைக்கை எந்த நிறுவனமும் கொண்டு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தயாரிப்பு நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும், இன்றும் ஒரு நல்ல கண்டிஷனில் இருக்கும் RX100 பைக்கை பார்க்கும்போது பைக் பிரியர்களின் நெஞ்சம் துடிப்பது நிஜம்.

ஜி.வி. பிரகாஷுக்கு கிடைத்த கிப்ட்

'இம்மார்டல்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பலருக்கும் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆனால், படத்தின் நாயகன் ஜி.வி. பிரகாஷுக்கு யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புத்தம் புதிய பொலிவுடன் கூடிய யமஹா RX100 பைக் பரிசாக வழங்கப்பட்டது. சாவியை வாங்கிய உடனே ஜி.வி. பிரகாஷ் அந்த பைக்கை அரங்கிலேயே ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பழைய பைக் பிரியர்களின் ஆர்வம் மீண்டும் தூண்டியது என்று கூறலாம்.

புது RX100 எப்படி கிடைக்கும்?

ஜி.வி. பிரகாஷ் RX100 ஓட்டும் வீடியோ வைரலானதில் இருந்து, இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கேள்விதான் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது "இப்போ புதுசா ஷோரூம்ல RX100 விக்கிறாங்களா? நாங்க எப்படி புது பைக் வாங்கி ரிஜிஸ்டர் பண்றது?" என்பதுதான் அது.

ஆனால், சட்டப்பூர்வமாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் இன்று ஒரு யமஹா ஷோரூமுக்குச் சென்று புத்தம் புதிய RX100 பைக்கை புக் செய்யவோ, அதற்கு புதியதாக ஆர்.டி.ஓ (RTO) ஆபீஸில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யவோ முடியாது. இந்திய அரசின் தற்போதைய கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி (BS6 Emission Norms), பழைய 2-ஸ்ட்ரோக் (2-Stroke) இன்ஜின் கொண்ட வாகனங்களை புதியதாக பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை. யமஹா நிறுவனமும் இந்த பைக்கின் தயாரிப்பை எப்போதோ நிறுத்திவிட்டது.

ஜி.வி. பிரகாஷுக்கு கிடைத்தது எப்படி?

ஜி.வி. பிரகாஷுக்கு கிடைத்தது ஷோரூமில் வாங்கிய பைக் அல்ல. சந்தையில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு பழைய செகண்ட் ஹேண்ட் RX100 பைக்கை வாங்கி, அதன் இன்ஜின் முதல் பாடி வரை ஒவ்வொரு பாகத்தையும் மெக்கானிக்குகள் மூலம் தேடித் பிடித்து மாற்றி, புத்தம் புதிய பைக் போல ரீ-ஸ்டோர் (Restore) செய்து தயாரிப்பாளர் பரிசளித்துள்ளார்.

உங்களுக்கும் இந்த பைக் வேண்டும் என்றால், முறையான ஆர்.சி புக் (RC Book) உள்ள ஒரு பழைய பைக்கை வாங்கி, 15 வருடங்கள் முடிந்திருந்தால் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கிரீன் டேக்ஸ் (Green Tax) மற்றும் அபராதம் செலுத்தி, எஃப்.சி (FC - Fitness Certificate) புதுப்பித்து, உங்கள் பெயருக்கு ஓனர்ஷிப் மாற்றிக் கொள்ளலாம்.

புதிய RX100 வருமா?

பழைய பைக்கை வாங்கி ரீ-ஸ்டோர் செய்ய முடியாதவர்களுக்காக ஒரு நல்ல செய்தியும் உலா வருகிறது. யமஹா நிறுவனம் புதிய 4-ஸ்ட்ரோக் இன்ஜினுடன், தற்போதைய மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய புதிய யமஹா RX100 பைக்கை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடல் 2026 இறுதி அல்லது 2027-ன் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RX100 வாங்க முடியுமா? ஜி.வி. பிரகாஷ் பைக் கிப்ட் பின்னணியில் இருக்கும் ரகசியம்!