டெல்லி : இந்தியப் பிரீமியம் பைக் சந்தையில் இரட்டை சிலிண்டர் (Parallel-Twin) இன்ஜின் பைக்குகள் மூலம் தனி ராஜாங்கமே நடத்தி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 750 (Royal Enfield Continental GT 750) பைக்கைத் தீவிரமாகச் சோதித்து வருகிறது.
சாலைகளில் இந்த பைக் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புதிய 'ஸ்பை படங்கள்' தற்போது இணையதளங்களில் லீக் பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தற்போதைய 650 மாடலை விட அதிக பவர்ஃபுல்லாகவும், அசல் இத்தாலியன் ரேசிங் பைக் போன்ற 'செமி-ஃபேரிங்' (Semi-Faired) ஸ்போர்ட்டி தோற்றத்துடனும் இந்த பைக் சோதிக்கப்படுவதுதான் இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
தற்போது கசிந்துள்ள ஸ்பை படங்களின்படி, இந்த புதிய 750சிசி கஃபே-ரேசர் பைக் முன்பக்கத்தில் ஒரு அழகான செமி-ஃபேரிங் அமைப்பைக் கொண்டுள்ளது. இது வண்டியின் ஸ்போர்ட்டி லுக்கை பலமடங்கு உயர்த்துவதுடன், அதிவேகத்தில் செல்லும்போது ரைடரை எதிர்காற்றிலிருந்து (Wind protection) பாதுகாக்கும். வண்டியின் முன்பக்கத்தில் வட்ட வடிவ எல்இடி (LED) முகப்பு விளக்கு, ஹேண்டில்பாரின் முனைகளில் பொருத்தப்பட்ட 'பார்-எண்ட் மிரர்கள்' மற்றும் சிங்கிள்-பீஸ் சொகுசு சீட் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வண்டியின் ஸ்போர்ட்டி லுக்கை மேலும் அதிகரிக்க அதன் இன்ஜின் கேசிங், அலாய் வீல்கள் மற்றும் மேல்நோக்கி வளைந்து செல்லும் இரட்டை எக்ஸாஸ்ட் சைலன்சர்கள் (Twin upswept exhausts) என அனைத்தும் அலாதியான மேட் பிளாக் (Blacked-out) நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் உள்ள பைக்கில் இரட்டை வட்ட வடிவ செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த வாரம் சோதிக்கப்பட்ட ஹிமாலயன் 750 மாடலில் இருந்த கார் போன்ற வட்ட வடிவ டிஎஃப்டி (TFT) திரையும் இதனுடைய டாப் வேரியண்ட்டில் வர வாய்ப்புகள் உள்ளன.
மிரட்டலான 750சிசி இன்ஜின்
இந்த புதிய கான்டினென்டல் ஜிடி 750 பைக்கில், ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக உருவாக்கி வரும் 750சிசி ஏர் அண்ட் ஆயில்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜினைப் பயன்படுத்தவுள்ளது. இதே இன்ஜின்தான் வரவிருக்கும் புதிய ஹிமாலயன் 750 பைக்கிலும் பயன்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராட்சத இன்ஜின் அதிகபட்சமாக 55 PS பவரையும், 60 Nm டார்க் திறனையும் மிக ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் படி டியூன் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் நெடுஞ்சாலைகளில் வண்டியை அதிர்வு இல்லாமல் ஸ்மூத்தாக க்ரூஸிங் செய்ய உதவும். மேலும், பைக் பிரியர்களைக் கவரும் விதமாக, கிளட்ச் பயன்படுத்தாமல் கியரை மிக வேகமாக மாற்ற உதவும் 'குவிக் ஷிப்டர்' (Quickshifter) தொழில்நுட்பமும் இதில் கூடுதல் ஆக்ஸஸரியாக வழங்கப்படவுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு தோராயமாக 22 முதல் 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போ வரும்?
விலை எவ்வளவு இருக்கும்?ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த காரின் தயாரிப்பு வடிவத்தை (Production Version) இந்த ஆண்டின் இறுதியில் கோவாவில் நடைபெறும் தங்களது புகழ்பெற்ற 'மோட்டோவெர்ஸ்' (Motoverse) திருவிழாவில் உலகிற்கு முதன்முறையாகக் காட்சிப்படுத்தவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் இந்த புதிய ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 750 பைக் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விலையைப் பொறுத்தவரை, இந்த புதிய ஃபேரிங் வேரியண்ட் மாடலானது இதனுடைய ஸ்டாண்டர்ட் மாடலை விட சற்று கூடுதல் விலையில் வரும் எனத் தெரிகிறது. இதன் ஸ்டாண்டர்ட் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.4.10 லட்சம் என்ற பட்ஜெட்டில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த பைக் விற்பனைக்கு வரும் போது தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ராயல் என்பீல்டின் அதிகாரப்பூர்வ ஷோரூம்கள் வழியாக நீங்கள் நேரில் பார்த்து டெஸ்ட் டிரைவ் செய்து புக் செய்து கொள்ளலாம்.
