டெல்லி : இத்தாலியின் புகழ்பெற்ற சூப்பர்பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி (Ducati), இந்தியாவில் தனது புதிய மோட்டார் சைக்கிளை வெளியிடத் தயாராகி வருகிறது. இதற்காக ஆகஸ்ட் 10-ம் தேதியைக் குறிப்பிட்டு "Block Your Date" என்ற அழைப்புடன் கூடிய மர்மமான டீசர் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள குறியீடுகளின் அடிப்படையில், அது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட 2026 டுகாட்டி மான்ஸ்டர் (2026 Ducati Monster) தான் என்று மோட்டார் சைக்கிள் உலகத்தில் பேசப்படுகிறது.
வெளியீட்டுத் தேதி
சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்ட இந்த புதிய டுகாட்டி மாடலின் வடிவமைப்பு காப்புரிமை சமீபத்தில் இந்தியாவில் பதிவாகியிருந்தது. உலகளாவிய சந்தையில் புதிய வடிவமைப்புடன் வலம்வரும் இந்த லேட்டஸ்ட் மாடல், இந்திய வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைக்காமலேயே இருந்தது. அந்த நீண்ட காலக் குறையைப் போக்கும் விதமாக இந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய மாடல், இந்திய சூப்பர்பைக் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஞ்சின் செயல்திறன் மற்றும் நவீன வடிவமைப்பு
இந்த புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக்கில் முந்தைய பதிப்புகளை விடப் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பழைய 937சிசி எஞ்சினுக்கு மாற்றாக, முற்றிலும் புதிய மற்றும் அதிநவீன 890சிசி வி-ட்வின் (V2) எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின் சுமாராக 111 ஹெச்பி பவரையும், 91.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது.
மேலும், இதற்குத் துணையாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இருவழி குவிக்ஷிஃப்டர் (Bi-directional Quickshifter) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் விமர்சிக்கப்பட்ட எரிபொருள் தொட்டியின் தோற்றம் மாற்றப்பட்டு, டுகாட்டியின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் மிகவும் மஸ்குலரான (Muscular Fuel Tank) வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
விலை, மைலேஜ்
இந்தியாவில் இதற்கு முன்பு விற்பனையில் இருந்த முந்தைய டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 13.84 லட்சமாக இருந்தது. அந்த வகையில், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய 2026 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 14 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிவேக சூப்பர்பைக் மூலமாக நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களைப் பொறுத்து லிட்டருக்குத் தோராயமாக 17 முதல் 20 கி.மீ வரை மைலேஜ் பெற முடியும். இந்தியச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் இந்த புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக்குகளுக்குப் போட்டியாக, சக்திவாய்ந்த டிரையம்ப் ஸ்டரீட் ட்ரிபிள் 765 (Triumph Street Triple 765) மற்றும் பைக் காதலர்களின் ஆல்-டைம் பேவரைட்டான கவாசாகி இசட்900 (Kawasaki Z900) ஆகிய முன்னணி மாடல்கள் கடுமையான போட்டியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
