சென்னை : தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது கடந்த சில நாட்களாகத் தொடர் அதிரடி உயர்வைச் சந்தித்து வருவது நகை வாங்குவோரையும் நடுத்தர மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும், சவரன் ரூ.250 அதிகரித்து ரூ.1,06,000-க்கும் விற்பனை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி விலை சற்று குறைந்து கிராம் ரூ.13,200-க்கும், சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையானது. ஆனால், இந்த நிதான நிலை நீடிக்காமல், ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று தங்கம் விலை காலையிலேயே சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880 ஆனதுடன், மாலையிலும் மீண்டும் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,840 என ஒரே நாளில் இருமுறை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்த தொடர் விலை ஏற்றத்தின் உச்சமாக, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பொதுமக்களைப் பதற வைத்த நிலையில், இன்றும் அதன் வேகம் குறையாமல் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ரூ.1,10,000 என்ற வரலாற்றுச் சாதனையான புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 வரை அதிரடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கும், கிலோ பார் வெள்ளிக்கு பத்தாயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருவது பொதுமக்களின் பட்ஜெட்டை முற்றிலுமாகப் பாதித்துள்ளதுடன், எதிர்காலத்தில் நகை வாங்குவது எளிய மக்களுக்கு எட்டாக்க கனவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
