வேளாண் பட்ஜெட் 2026 : விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..காட்டுப்பன்றி சேதத்தை தடுக்க ரூ.7.35 கோடி!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27ல் மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி, இயற்கை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை, காட்டுப்பன்றி பயிர் சேதத் தடுப்புக்கு ரூ.7.35 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்குப் பயனளிக்கும் முந்தைய காலத்துத் திட்டங்கள் தொடரும் அதேவேளையில், விவசாயிகளின் நலனுக்காகவும் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் பல்வேறு புதிய மற்றும் சிறப்பான திட்டங்கள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம் (ஐந்தாண்டு திட்டம்)

தமிழ்நாட்டில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் பெருமளவில் குறைத்து, மண்ணின் இயற்கையான வளத்தை மேம்படுத்தும் நோக்கில் 'தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்' புதிய ஐந்தாண்டு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகப் பிரம்மாண்டமாக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் விளைநிலங்களில் நச்சு மதிப்பீடு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மட்டும் தனியாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்புத் திட்டம்

இயற்கை மற்றும் உயிர்ம விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 'உயிரம வேளாண் பரவலாக்க சிறப்புத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்குத் தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். முதற்கட்டமாக 20,000 ஏக்கர் பரப்பளவிற்குச் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், விவசாயிகள் தங்களது நிலங்களில் மண்புழு உரக் கூடம் அமைத்துக் கொள்வதற்காக ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புத் தடுப்பு

விவசாயிகள் பலரும் முகங்கொடுத்துவரும் மிகப்பெரிய பிரச்சினையான காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் மற்றும் இழப்புகளைத் தடுத்துப் பாதுகாப்பதற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளையும் மண் வளத்தையும் காக்கும் அரணாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் பட்ஜெட் 2026 : விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..காட்டுப்பன்றி சேதத்தை தடுக்க ரூ.7.35 கோடி!