டெல்லி : இந்திய கார் சந்தையில் வித்தியாசமான 'கூபே எஸ்யூவி' (SUV-Coupe) ஸ்டைலில் காரை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் பெரிய அலையைக் கிளப்பிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது தனது விற்பனையை இன்னும் பலமடங்கு உயர்த்தும் நோக்கில் புத்தம் புதிய டாடா கர்வ் சீரிஸ் X (Tata Curvv Series X) பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதத்தில் இதன் எலக்ட்ரிக் (EV) மாடலில் சீரிஸ் X வரிசையைக் கொண்டு வந்த டாடா, தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகப் பெட்ரோல், டீசல் இன்ஜின் மாடல்களிலும் மிகக் குறைந்த ஆரம்ப விலையில் எக்கச்சக்க மாஸ் ஃபீச்சர்ஸுடன் இந்த காரை களமிறக்கியுள்ளது.
வியக்க வைக்கும் விலை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நடுத்தர பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த காரின் ஆரம்ப விலை வெறும் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மிக அதிரடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் X வரிசையில் ஸ்மார்ட் X, ப்யூர் X, ப்யூர் X+, கிரியேட்டிவ் X+, அக்கம்ப்ளிஷ்டு X மற்றும் அக்கம்ப்ளிஷ்டு X+ எனப் பலதரப்பட்ட புதிய வேரியண்ட்களை டாடா நிறுவனம் சேர்த்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் பட்ஜெட்டிற்குள் பிரீமியம் வசதிகளைப் பெறும் வகையில் இந்த வேரியண்ட்களின் விலைகள் மிகக் கச்சிதமாக வகுக்கப்பட்டுள்ளன.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
இதன் ஆரம்ப மாடலான ஸ்மார்ட் X (Smart X) வேரியண்ட் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸுடன் ரூ.9.99 லட்சத்திற்கு கிடைக்கிறது. இதில் காற்றோட்ட வசதி கொண்ட ஆர்-கம்ஃபோர்ட் சீட்டுகள், 17-இன்ச் ஏரோ ஸ்டைல் வீல்கள், நவீன பிளஷ் டோர் ஹேண்டில்கள், மல்டிபிள் டிரைவிங் மோடுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பாதுகாப்புக்காக 6 ஏர்பாகுகள், ஈஎஸ்பி (ESP), ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் வசதிகள் தரநிலையாகவே (Standard) கொடுக்கப்பட்டுள்ளன.இதற்கு அடுத்த மாடலான ப்யூர் X (Pure X) வேரியண்ட் ரூ.10.99 லட்சத்தில் தொடங்குகிறது.
இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய 10.25-இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, குரூஸ் கன்ட்ரோல் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் வசதிகள் உள்ளன. இதன் மேம்பட்ட வேரியண்ட்டான ப்யூர் X+ (Pure X+) மாடல் ரூ.11.79 லட்சம் விலையில் அலாதியான ஆய்ஸ்டர் ஒயிட் லெதர் சீட்டுகள் மற்றும் 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்களுடன் வருகிறது. மேலும், இதன் மிரட்டலான 'டார்க்' (DARK) எடிஷன் மாடல் ரூ.11.99 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
அதிநவீன சொகுசு வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள கிரியேட்டிவ் X+ (Creative X+) வேரியண்ட் ரூ.12.91 லட்சம் விலையில் கிடைக்கிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான பனோரமிக் சன்ரூஃப், 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் காரைச் சுற்றி நாற்புறமும் காட்டும் 360-டிகிரி 3D கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் டாப்-எண்ட் மாடல்களான அக்கம்ப்ளிஷ்டு X மற்றும் அக்கம்ப்ளிஷ்டு X+ வேரியண்ட்களில் லெவல் 2 ஏடிஏஎஸ் (Level 2 ADAS) பாதுகாப்பு தொழில்நுட்பம், சைகை மூலம் திறக்கும் பவர்டு டெயில்கேட் (Gesture Tailgate), 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் (JBL) ஆடியோ சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற எக்கச்சக்க சொகுசு வசதிகள் நிறைந்துள்ளன.
மைலேஜ் மற்றும் இன்ஜின் செயல்திறன்
டாடா கர்வ் சீரிஸ் X கார் நல்ல பவர்ஃபுல்லான டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது நெடுஞ்சாலைகளில் காரை மிக ஸ்மூத்தாகவும், அதிவேகத்திலும் கொண்டு செல்ல உதவுகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, இதன் பெட்ரோல் மாடல்கள் லிட்டருக்கு தோராயமாக 16 முதல் 18 கிலோமீட்டர் வரையிலும், இதனுடைய டீசல் மாடல்கள் லிட்டருக்கு 20 முதல் 22 கிலோமீட்டர் வரையிலும் ஒரு பக்காவான மைலேஜை வழங்குகின்றன. நீண்ட தூரப் பயணங்களுக்கும், குடும்பத்துடன் சொகுசான ரைடு செல்வதற்கும் இந்த மைலேஜ் மற்றும் செயல்திறன் மிகவும் கச்சிதமாக இருக்கும்.
எப்போ வரும்? எங்கே கிடைக்கும்?
புதிய டாடா கர்வ் சீரிஸ் X கார் தற்போது இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாடாவின் அதிகாரப்பூர்வ கார் ஷோரூம்களில் இந்த புதிய வேரியண்ட்கள் தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்குச் சென்று காரை நேரில் பார்த்து, டெஸ்ட் டிரைவ் செய்து தங்களுக்குப் பிடித்த வேரியண்ட்டை பண்டிகைக் காலச் சலுகைகளுடன் புக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
